Archives: டிசம்பர் 2016

எளிமையான வார்த்தைகளில் உள்ள வல்லமை

மருத்துவமனையில் இருந்த என் தந்தையின் அறையில் இருந்து பலத்த சிரிப்பு சத்தம் எழும்பியது. வேறொன்றுமில்லை, எனது தந்தையைச் சந்திக்க அவருடைய நண்பர்களான லாரி ஓட்டுநர்கள் இரண்டு பேரும், அருகிலிருந்த வயல்களிலிருந்த இரண்டு பெண் மணிகளும் நானும் அங்கிருந்தேன். லாரி ஓட்டுநர்களில் ஒருவர் இளவயதில் கிராமிய பாடல்கள் பாடி வந்தவர், மற்றொருவர் தச்சுவேலை செய்து வந்தவர்.

“பின்பு அவர் அந்த கண்ணாடி பாட்டிலை என் தலைமேல் போட்டு உடைத்தார்” என்று அந்த தச்சுவேலைக்காரர் மதுபான விடுதி ஒன்றில் நடந்த கதையைக் கூறி முடித்தார்.

நகைச்சுவையுடன் கூறப்பட்ட பழங்கதையைக் கேட்டு அறையே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. நுரையீரல் புற்றுநோயால் அவதியுற்ற என் தந்தை சுவாசிக்க கடினப்பட்டாலும் நன்கு சிரித்து மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தினார். “ராண்டி ஒரு போதகர்” எனக் கூறி அனைவரும் கவனமாய் பேச வேண்டும் என்பது போல் வேடிக்கையாய் சொன்னார். இரண்டு விநாடிகளுக்கு அமைதி நிலவியது, அதன் பின்னர் இந்த புதிய செய்தியைக் கேட்டு அறையே சிரிப்பில் வெடித்து சிதறியது.

இவ்வாறாக நாற்பது நிமிடங்கள் சென்றிருக்கும். அப்பொழுது திடீரென அந்த தச்சுவேலை செய்பவர் தன் தொண்டையை சரி செய்து, தந்தையின் பக்கம் திரும்பி, “சரி ஹோவர்ட் (Howard) இத்தோடு குடியும், மதுபானச் சண்டையும் எனக்கு கிடையாது. அந்நாட்கள் முடிந்து போயிற்று. இன்றைக்கு நான் வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. என்னுடைய மீட்பரும் இரட்சகருமாகிய இயேசுவைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும்”

பின்னர் அவர் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார். முதலில் லேசாக வேண்டாம் என மறுத்த என் தந்தை பின்னர் கேட்கத் தொடங்கினார். அதைவிட இனிமையாய், அழகாய், அமைதியாய் நற்செய்தியை பிரசங்கித்து நான் கேட்டதில்லை. என் தந்தை அதை கூர்ந்து கேட்டு கவனித்தார். சில வருடங்கள் கழிந்த பின்பு இயேசுவை விசுவாசித்தார்.

ஓர் பழைய நண்பர் அவரது எளிமையான வாழ்வில் இருந்து பகிர்ந்த மிக எளிமையான சாட்சி அது. எளிமை என்பது பெலவீனமானதோ அல்லது மூடத்தனமானதோ அல்ல, மாறாக அது ஒளிவுமறைவின்றி நேர்மையானது என்பதை நான் அன்று அறிந்து கொண்டேன்.

இயேசுவைப் போல. அவரது இரட்சிப்பைப் போல.

ஏற்ற வேளையில்

“ஏற்ற வேளையில்” என்ற தலைப்பில் ஓர் புத்தகத்தை எழுதப்போகிறேன் என்று விளையாட்டாய் நான் கூறுவதுண்டு. என்னைப் பற்றி நன்கு அறிந்த சிலர் உடனே சிரித்து விடுவர். ஏனெனில் நான் அடிக்கடி காலதாமதமாய் வரும் பழக்கம் உடையவள். முயற்சி செய்யாதினால் அல்ல எனது உற்சாகத்தினாலும் நம்பிக்கையின் மிகுதியாலும் தான் கால தாமதம் ஏற்பட்டது என்று கூறுவேன். “இந்த முறை” நான் நிறைய காரியத்தை குறுகிய காலகட்டத்திற்குள் எளிதாய் செய்துமுடிப்பேன் என்று ஒரு தவறான நம்பிக்கையை நான் உறுதியாய் பற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சொன்னதை நான் செய்ததும் கிடையாது. இதனால் எப்போதும் போலவே காலதாமதமாய் முடித்த வேலைக்காக மன்னிப்பு கோருவேன்.

ஆனால் இதற்கு மாறாக தேவன் எப்போதும் சரியான நேரத்தில் காரியங்களைச் செய்கிறார். அவர் தாமதமாய் செயல்படுகின்றார் என்று நாம் எண்ணலாம், ஆனால் அவர் அப்படி செயல்படுபவர் அல்ல. வேதம் முழுவதிலும் அநேக மக்கள் தேவன் நிர்ணயித்த காலத்தை குறித்து பொறுமை இழந்துபோவதைக் காணலாம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் வரவிற்காக அநேக காலம் காத்திருந்த இஸ்ரவேலர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆனால் சிமியோனும், அன்னாளும் அப்படி செயல்படவில்லை. அவர்கள் இருவரும் தினந்தோறும் ஆலயத்தில் ஜெபித்து மேசியாவுக்காக காத்திருந்தனர். அவர்களுடைய விசுவாசத்திற்கு பலன் கிடைத்தது. மரியாளும், யோசேப்பும் குழந்தை இயேசுவை பிரதிஷ்டை பண்ண ஆலயத்திற்கு அழைத்து வந்த போது அவர்கள் கண்கள் மேசியாவைக் கண்டன.

அநேக நேரங்களில் நமது கால அட்டவணைக்குள் தேவன் பதில் அளிக்கவில்லை என்று நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் கிறிஸ்துமஸ், “காலம் நிறைவேறினபோது... தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.., மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக..,” (கலா. 4:5-6) என்ற வசனம் தேவனுடைய இயல்பை நமக்கு விவரிக்கின்றது. தேவனுடைய நேரம் எப்பொழுதும் நேர்த்தியானது, அதற்காக காத்திருப்பதே பாக்கியமாகும்.

அனைவருக்கும் மகிழ்ச்சி

கிறிஸ்தவ புத்தக வெளியீட்டு மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. 280 நபர்கள் 50 நாடுகளில் இருந்து வந்திருந்தனர். கடைசி நாளில் அவர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துகொள்ள ஹோட்டலின் வெளியே திரண்டனர். இரண்டாம் தளத்தில் இருந்த பால்கனியில் இருந்து புகைப்படக்காரர் பல புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்த பின்பு “எல்லாம் முடிந்தது” என்று சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்து ஒருவர் “ஜாய் டூ த வேர்ல்டு!” (Joy to the world) என்று கத்தினார். உடனடியாக மற்றொருவர் “த லார்ட் இஸ் கம்” (The Lord is Come) என்ற பாடலின் அடுத்தவரியை மறுமொழியாக பாடினார். உடனே குழுவாய் சேர்ந்து அக்கிறிஸ்துமஸ் பாடலை அனைவரும் அழகாய் பாடினர். மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.

லூக்கா விவரிக்கும் கிறிஸ்துமஸ் செய்தியில் ஓர் தேவ தூதன் இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு இவ்வாறு அறிவிப்பதை காணலாம். “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று காத்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11).

இது சிலருக்கான மகிழ்ச்சி அல்ல, இது எல்லோரும் அனுபவிப்பதற்கே. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா. 3:16).

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் இயேசுவின் நற்செய்தியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, நாம் அவர்களோடு ஒருமனப்பட்டு அவரது நீதியின் மகிமையையும் அன்பின் மகத்துவங்களையும் புகழ்ந்து பாடுகின்றோம்.

“ஆர்ப்பரிப்போம் இந்நாளில், கிறிஸ்து இன்று பிறந்தாரே!”

சிறையில் ஓர் கிறிஸ்துமஸ்

அருட்திரு. மார்டின் நீமோலர் (Rev. Martin Niemoller), ஜெர்மனியில் மிகவும் பிரசித்திப் பெற்ற போதகர். அவர் வெளிப்படையாக ஹிட்லரை எதிர்த்து பேசியதால் எட்டு வருடங்கள் நாஜி போர்க் கைதிகள் முகாமில் சிறைவாசம் அனுபவித்தார். 1944ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீமோலர் டாச்சோவில் (Dachau) தன்னுடன் இருந்த மற்ற சிறைக்கைதிகளை பார்த்து “என் அருமை நண்பர்களே, இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெத்லகேமில் குழந்தையாய்ப் பிறந்து நம்முடைய கடினமான பாரங்களை சுமக்க வந்த அந்த ஒப்பில்லாதவரைத் தேடுவோம். தேவன் தாமே நம்மையும், அவரையும் இணைக்க ஓர் பாலம் கட்டினார். பரத்திலிருந்து ஓர் விடியல் நம்மேல் உதித்தது,” என்ற விசுவாச வார்த்தைகளைக் கூறினார்.

கிறிஸ்துமஸ் நாளில் நாம் தழுவிக்கொள்ள வேண்டிய நற்செய்தி இதுவே. தேவன் கிறிஸ்துவாக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து அவருக்கும், நமக்கும் இடையேயான இடைவெளியை தகர்த்துவிட்டார். இருள் சுழ்ந்த சிறைவாழ்க்கைகுள் ஒளியாய் புகுந்துவிட்டார். நாம் சுமந்து செல்லும் துன்பம், துயரம், குற்ற உணர்வு, தனிமை ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.

இருண்ட சிறைச்சாலையில் தங்கியிருந்த நீமோலர், “அன்று ஆடு மேய்ப்பவர்கள் மேல் பிரகாசமான ஒளி உதித்தது. அது போல இன்று நம் இருளிலும் ஜீவ ஒளியின் கதிர்கள் நம்மேல் உதிக்கும்” என்ற நற்செய்தியை பகரிந்து கொண்ட அவரது வார்த்தைகள் ஏசாயா தீர்க்கதரிசனமாய் உரைத்த வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றது. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2).

நாம் இன்றைக்கு எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் தம்முடைய மகிழ்ச்சியோடும், ஒளியோடும் இயேசு நம்முடைய இருளான வாழ்க்கைக்குள் பரவேசித்துள்ளார்.

எதை நான் தருவேன்?

 

கிறிஸ்துமஸிற்காக தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கும் பொறுப்பை பெற்ற சிலர் அந்த வருடம் ஓர் புதுமையான வழியை கையாண்டனர். “கிறிஸ்துமஸ் பட்டியல்” என்ற கருப் பொருளின் அடிப்படையில் அலங்கரித்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்காமல், ஒவ்வொரு நபரிடமும் ஓர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒரு சீட்டை கொடுத்தனர். இயேசுவிடத்திலிருந்து என்ன பரிசு வேண்டும் என்று ஒரு பக்கத்திலும், பின்பக்கத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாடி அங்கீகரிக்கும் விதத்தில் அவருக்கு என்ன பரிசு கொடுக்க போகின்றனர் என்றும் எழுதவேண்டும். அதை வைத்து ஆலயத்தை அலங்கரிக்க எண்ணினர்.

நீங்கள் இதை செய்வீர்களானால் என்ன பரிசைக் கேட்பீர்கள், எதைக் கொடுப்பீர்கள்? வேதாகமத்தில் அநேக யோசனைகளைக் காணலாம். தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பதாக வாக்களித்துள்ளார். அதனால் நாம் ஓர் புதிய வேலையைக் கேட்கலாம், பணத் தேவைகளை சந்திக்கும்படியாகவும், நம்முடைய அல்லது மற்றவருடைய சரீர சுகத்திற்காகவும், குடும்பங்களில் நல்லுறவு மேம்படவும் நாம் வேண்டிக்கொள்ளலாம். மேலும் தேவனுடைய பணியைச் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பரிசு என்ன என்று நாம் எண்ணலாம். அவற்றில் பல ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் ஆவியின் கனி நம்வாழ்வில் இன்னும் அதிகமாக வெளிப்பட விரும்புவோம் (கலா. 5:22-23).

அவரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகச்சிறந்த பரிசு - தேவனின் ஈவாகிய குமாரனும் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து தான். அவரின் மூலம் பாவ மன்னிப்பையும், மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கையையும், சதாகாலமும் நீடிக்கும் நித்திய வாழ்வின் வாக்குறு தியையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே அவருக்கு நம்மால் தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்னவென்றால் நம்முடைய இருதயம் தான்.